search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் விபத்து"

    • போலீசார் விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.
    • இறந்தவர்களின் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். அவர்கள் பலியானவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

    சேலம்:

    சேலத்தில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு டிப்பர் லாரி அரூர் நோக்கி நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. அப்போது அரூரில் இருந்து சேலம் நோக்கி ஒரு கண்டெய்னர் லாரி வந்தது.

    மஞ்சவாடி கணவாய் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரி பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடியது. பின்னர் எதிரே சிமெண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரி மீது கண்டெய்னர் லாரி பயங்கரமாக மோதியது. இதில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் டிப்பர் லாரியில் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா பாரூரை சேர்ந்த இளங்கோ (வயது45), தருமபுரி மாவட்டம் நல்லாம்பள்ளி தாலுகா ஈச்சம்பட்டியை அடுத்த முத்தம்பட்டியை சேர்ந்த பழனி (வயது 40) ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி உயிருக்கு போராடினர்.

    பின்னர் சிறிது நேரத்தில் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை உடல்களை மீட்க முயன்றனர். அப்போது இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டதால் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் போராடி மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து உதவி கமிஷனர் சரவணகுமார், வீராணம் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி மற்றும் போலீசார் 2 பேரின் உடலையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கண்டெய்னர் லாரி டிரைவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதையடுத்து போலீசார் விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். இதற்கிடையே இறந்தவர்களின் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். அவர்கள் பலியானவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் அந்த வழியாக வந்தது. கார் மேம்பாலம் அருகே ரோட்டில் ஏறியபோது திடீரென ஆம்னி பஸ் மீது பயங்கரமாக மோதியது.
    • காரின் முன்பகுதி, உள்பக்கம் அனைத்தும் அப்பளம்போல் நொறுங்கியது. கார் இருக்கைகள் தூக்கி வீசப்பட்டன. கண்ணாடி உடைந்து சுக்கு நூறாக சிதறியது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் கிரைன் பஜார் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். ஆட்டோ மெக்கானிக்கான இவர் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். இதையடுத்து 30-வது நாள் காரிய நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதற்காக உறவினர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர்.

    இந்த நிலையில் இரவு கண் விழித்து தூங்காமல் இருப்பதற்காக நேற்று இரவு டீ குடிக்க வேண்டி ஆத்தூர் பஸ் நிலையத்திற்கு அவரது உறவினர்கள் ராஜேஷ், சந்தியா உள்பட 11 பேர் ஆம்னி காரில் சென்றனர். அங்கு ஒரு டீ கடையில் அனைவரும் டீ குடித்து விட்டு அங்கிருந்து சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பினர்.

    காரை ராஜேஷ் ஓட்டி வந்தார். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓட்டம்பாறை மேம்பாலம் பகுதியில் வலது புறத்தில் கார் சென்று கொண்டிருந்தது.

    அப்போது ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் அந்த வழியாக வந்தது. கார் மேம்பாலம் அருகே ரோட்டில் ஏறியபோது திடீரென ஆம்னி பஸ் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் காரின் முன்பகுதி, உள்பக்கம் அனைத்தும் அப்பளம்போல் நொறுங்கியது. கார் இருக்கைகள் தூக்கி வீசப்பட்டன. கண்ணாடி உடைந்து சுக்கு நூறாக சிதறியது.

    இந்த விபத்தில், காரை ஓட்டிய ராஜேஷ் (வயது 29), காருக்குள் இருந்த சந்தியா (20), சரண்யா (26), ரம்யா (25), சுகன்யா (28) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பெரியண்ணன், கிருஷ்ணவேணி, சுதா, புவனேஸ்வரன், உதயகுமார், தன்ஷிகா (11) ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் அவர்கள் கதறினர்.

    இதை பார்த்த பொதுமக்கள் இது பற்றி ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அவர்கள், கார் இடிபாடுகளில் இருந்து படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆத்தூர் போலீசாரும் தீயணைப்பு துறையினரும் அங்கு விரைந்து வந்தனர்.

    இதையடுத்து இடிபாடுகளை அகற்றி 6 பேரையும் மீட்டு மோட்டார்சைக்கிள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் டாக்டர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் 11 வயது சிறுமி தன்ஷிகா சேலம் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

    உயிரிழந்த 5 பேர் உடல்களும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் அவர்களது உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதபடி உள்ளனர்.

    இது குறித்த தகவல் அறிந்து வந்த ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா மற்றும் ஆத்தூர் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே அங்கு சென்ற மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் ஆகியோர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். துக்க நிழ்வுக்கு வந்தவர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த மாரிசாமி என்பவரது மனைவி சுதா (23), பெரியசாமி மகன் பெயரியண்ணன் (38) , ஹரிமூர்த்தி மகள் புவனேஸ்வரி (17), செல்வராஜ் மனைவி கிருஷ்ணவேணி (45), சிவகுமார் மகன் உதயகுமா ர் (17)ஆகிய 5 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சந்தித்த கலெக்டர் கார்மேகம் மற்றும் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆறுதல் கூறினர். மேலும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தனர். மேலும் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் உடனுக்குடன் செய்யவும் டாக்டர்களிடம் கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். அப்போது கதறி அழுதவர்களை கலெக்டர் தேற்றினார். தொடர்ந்து விபத்து நடந்த பகுதியையும் கலெக்டர் கார்மேகம், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் ஆகியோர் பார்வையிட்டனர்.

    • விபத்தில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • மணிகண்டன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இவரை தொடர்ந்து, அவரது நண்பரான பயிற்சி காவலர் கிருஷ்ணனும் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஊராட்சி கீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 27). போலீஸ் வேலைக்கு தேர்வான இவர், தர்மபுரி காவலர் பயிற்சி பள்ளியில் காவலர் பயிற்சி பெற்று வந்தார். 3 நாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    நண்பர்களான இருவரும் பேளூர் பகுதியில் இருந்து கீரப்பட்டி நோக்கி நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். கீரப்பட்டி பேருந்து நிறுத்தம் சண்முகம் தோட்டத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன்(26). என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது பலமாக மோதியது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இவரை தொடர்ந்து, அவரது நண்பரான பயிற்சி காவலர் கிருஷ்ணனும் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். அர்ஜுனன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பயிற்சி காவலர் உட்பட 2 பேர் பலியான சம்பவம் இப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×